சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை
சென்னையில், மாநில – ஒன்றிய அரசுகளின் உறவுகள் குறித்து, ஆய்வு செய்வதற்கான குழு ஏற்பாடு செய்திருந்த, தேசிய கருத்தரங்கில், துணை முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், ``அரசியல மைப்புச் சட்டம் உறுதிப்படுத்திய மாநில சுயாட்சி உரிமைகளை, முழுவதுமாக நிலைநாட்டிடும் வரை, தமிழ்நாடு முன் வரிசையில் நின்று போராடும் – வெல்லும்’’ என்று குறிப்பிட்டார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:
மாநில மற்றும் ஒன்றிய அரசின் உறவுகள் குறித்த, இந்த இரண்டு நாள் கருத்தரங்கத்தின் நிறைவு விழாவில், உங்களை எல்லாம் சந்தித்து, உங்களுடன் உரையாற்று வதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
சர்வாதிகாரப் போக்கு
ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்குகளால் மாநிலங்களின் உரிமைகள் கேள்விக்குறியாகி இருக்கின்ற இந்த நேரத்தில், சரியான தருணத்தில் இந்த முக்கிய மான நிகழ்வை, நாம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளில் ஒன்றான, முக்கியமான முழக்கம் `மாநில சுயாட்சி’. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், முரசொலி மாறன், நம் திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் மாநில சுயாட்சி முழக்கத்தை உயர்த்திப் பிடித்தவர்கள்.
2021–ஆம் ஆண்டு நம் திராவிட முன்னேற்றக் கழகம் நம் முதல மைச்சர் அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து, டெல்லியில் உள்ள அரசை நாம் `மத்திய அரசு’ என்று அழைப்ப தில்லை. `ஒன்றிய அரசு’ என்றுதான் அழைத்துக்கொண்டு இருக்கிறோம். நாம் ஒன்றிய அரசு என்று அழைக்கத் தொடங்கியதும், பலர் பதறி விட்டார்கள், பலர் எதிர்த்தார்கள். அப்போது நம் முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்திலேயே மிகத் தெளிவாக ஒரு விளக்கத்தைச் சொன்னார்கள்.
அண்ணல் அம்பேத்கர்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், `யூனியன் அண்டு ஸ்டேட்’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. யூனியன் கவர்ன்மென்ட் என்பதை, மத்திய அரசு என்று மொழிபெயர்ப்பது சரியானதாக இருக்காது, அது தவறு என்று சட்டமன்றத்திலேயே விளக்கினார்கள். இதை அரசியல் சட்டத்தில் எழுதிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
ஒன்றிய அரசும், மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமே தவிர, ஒன்றிய அரசுக்கு மாநில அரசு கீழ்படிந்து செயல்படக்கூடாது என்பதுதான் அவர் சொன்ன தெளிவுரை. இந்த புரிதல் எல்லோருக்கும் ஏற்பட்டாக வேண்டும். அப்படி புரிந்துகொண்ட காரணத்தால்தான் நம் திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சிக்கு வந்தவுடன் மாநில சுயாட்சி முழக்கத்தை கையில் எடுத்தது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைத் தரும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இப்போதும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அது நடக்கும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக வலியுறுத்திக்கொண்டே இருக்கும்.
இராஜமன்னார் குழு
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1969–இல் முதலமைச்சராக பொறுப்பேற்றப்போது, டெல்லிக்குச் சென்ற முதல் பயணத்திலேயே மாநில சுயாட்சி பற்றித்தான் பேசினார். அதன்படி பின்னாளில் நீதியரசர் இராஜமன்னார் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தார் கலைஞர் அவர்கள். அந்தக் குழு அளித்த அறிக்கை யின்படி, 1974–ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை யும் நிறைவேற்றிக் காட்டியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
இராஜமன்னார் குழு அறிக்கையையும், சட்டமன்றத்தில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானத்தையும் இந்தியாவில் உள்ள பல மாநில முதலமைச்சர்களி டம் கொண்டு சேர்த்தார் கலைஞர் அவர்கள். மாநில சுயாட்சி கொள்கைக்கு இந்தியா முழுவதும் ஆதரவு திரட்டியவர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதேபோல, மாநில சுயாட்சி கோரிக்கை என்பதையே தவறு, பிரிவினை என்று சிலர் நம்மைப் பார்த்து விமர்சித்தார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதைப்போல கலைஞர் ஒரு முழக்கத்தை அறிவித்தார்கள். அதுதான் `மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்கிற முழக்கம். அந்த முழக்கம் இன்றும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
அதனால்தான் நம் முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய– மாநில அரசுகளுக்கு இருக்கின்ற உறவு குறித்து ஆராய, `ஹை லெவல் கமிட்டி டூ ஸ்டடி யூனியன் ஸ்டேட் ரிலேசன்ஷிப் (High level committee to study union state relationship) என்கிற உயர்நிலைக் குழுவை இன்று அமைத்துள்ளார்கள். ஒன்றிய அரசு, மாநில அரசின் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி நம் இனமானப் பேராசிரியர் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் ஒரு உதாரணத்தைச் சொல்லி இருக்கிறார். அதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.
பெரிய முள் – சிறிய முள்
ஒரு கடிகாரத்தில் மணியைக் காட்டுகின்ற முள் முதன்மையானது என்றாலும், நிமிடமுள் பெரிய அளவு இயங்கினால்தான், அந்த மணி முள் சிறிதளவு இயங்கும். அதேமாதிரி மிக நெருக்கமாக இருக்கின்ற மாநில அரசு பெரிய அளவு இயங்க வேண்டும். மத்திய அரசு அதற்கு இணக்கமாக, அளவுடன் இயங்க வேண்டும் என்று அருமையாகச் சொன்னார் நம் பேராசிரியர் அவர்கள்.
ஆனால், இப்போது ஒன்றிய அரசு என்ன செய்கிறது என்று பார்த்தால், அதிகாரத்தை மேல்மேலும் குவித்துக்கொண்டு இந்தியா என்ற கடிகாரத்தில் மணி முள் மட்டும் இருந்தால் போதும், நிமிட முள்ளே தேவையில்லை என்ற அளவிற்கு ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்புகூட நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அவசரமாகத் தாக்கல் செய்தார்கள். மாநில அமைச்சர்கள் மீதும், அமைச்சர்கள் மீதும் ஒரு குற்றத்தைச் சுமத்தி 30 நாட்கள் அவர்களை காவலில் வைத்துவிட்டால் போதும், அந்தக் குற்றம் நிரூபிப்பதற்கு முன்பே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக இருந்தாலும், அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கலாம் என்ற மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் தாக்கல் செய்துள்ளார். இது மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ஜனநாயத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு பகிரங்க மிரட்டல். அந்த மசோதா சட்டமாவதை நம் முதலமைச்சர் அவர்கள் எந்த காலத்திலும் அனுமதிக்கமாட்டார்.
இந்திய அரசியல் சட்டத்தில், மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்களை எல்லாம் பொதுப் பட்டியலுக்கு மாற்றி வருகிறார்கள். குறிப்பாக, மாநிலப் பட்டியலில் உள்ள கல்வி உரிமையை நம்மிடம் இருந்து பறிக்க முயற்சிக்கிறார்கள். கல்வி தொடர்பாக, மாநில சட்டமன்றங்களைப் புறக்கணித்துவிட்டு ஒன்றிய அரசே தங்கள் சட்டங்களை இயற்றி வருகிறார்கள். அதை எதிர்த்துத்தான் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நம் முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து உரிமைக் குரலை எழுப்பி வருகிறார்கள்.
அதற்கான தொடக்கமாகத்தான் மாநில கல்விக் கொள்கையை நம் முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்கள். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை, நம் முதலமைச்சர் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தார். ஒன்றிய அமைச்சர் அந்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டும்தான், நம் மாநிலத்திற்கு வரவேண்டிய கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை விடுவிக்க முடியும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னார்.
தலைவர் சூளுரை
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், தமிழ்நாட்டிற்குல் குலக்கல்வி வரும். அதாவது அப்பாவும் அம்மாவும் என்ன வேலை பார்க்கிறார்களோ, அப்பாவும் தாத்தாவும் என்ன வேலை பார்க்கிறார்களோ அதே தொழிலை நாமும் செய்ய வேண்டிய நிலைமைக்கு, நம்மைத் தள்ள அந்தக் கொள்கைகைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, மும்மொழிக்கொ ள்கையை ஏற்றுக்கொண்டால்தான் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கொடுப்போம் என்றுச் சொல்கிறார்கள். அதன் மூலம் இந்தியை குறுக்கு வழியில், தமிழ்நாட்டிற்குள் திணிக்கப் பார்க்கிறார்கள். அதை நம் முதலமைச்சர் அவர்கள் மிகத் தெளிவாக எதிர்த்தார்.
“நீங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கொடுப்பேன் என்று சொல்கிறீர்கள். ஒன்றிய அரசு எங்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், எந்த காலத்திலும் புதிய கல்விக் கொள்கையை, தமிழ்நாட்டு மக்களிடம் நான் கொண்டு செல்ல மாட்டேன்’’ என்று எதிர்த்து சூளுரைத்தவர்தான் நம் தலைவர் அவர்கள்.
இதனால் மாநில அரசுக்கு பல்வேறு வழிகளில் கடன் நெருக்கடி உள்ளாகிறது. வருமான வரி, சுங்க வரி, நிறுவன வரி, இப்போது புதிதாக ஜி.எஸ்.டி. என்று அனைத்து வளமான வரிகளையும் ஒன்றிய அரசு எடுத்துக் கொள்கிறது. மாநிலங்களை நிதிக்காக கையேந்த வைக்கும் அமைப்பாக மாற்றி விட்டார்.
மிகப்பெரிய அச்சுறுத்தல்
தொகுதி மறுவரையறை என்று ஒன்றைக் கொண்டு வந்துள்ளார்கள். தமிழ்நாடு போன்ற மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் மக்களவைத் தொகுதியைக் குறைக்கின்ற வேலையையும் ஒன்றிய அரசு செய்து வருகிறது. ஏற்கெனவே, தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டு இருக்கிறது.
ஓட்டுத் திருட்டு என்பது இந்திய ஜனநாயகத்திற்கே ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. எதிர்த்து கேள்வி கேட்கும் மாநிலங்களுக்கு போதுமான நிதியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. அதையெல்லாம் மீறித்தான் மாநில உரிமைகளை நாம் நிலைநாட்ட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
இருக்கின்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டே தமிழ்நாட்டை பொருளாதார வளர்ச்சியில் இன்றைக்கு இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக நம் முதலமைச்சர் அவர்கள் மாற்றிக்காட்டி இருக்கிறார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றைக்கே தெளிவாகச் சொன்னார். State autonomy is a Political demand, but it is not a demand of anyone political party என்றுச் சொன்னார். பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைப்போல இது ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கை இல்லை. மாநில சுயாட்சி என்பதே ஒரு அரசியல் கோரிக்கைதான். இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில், காலையிலிருந்து இன்று பல்வேறு தலைப்புகளில் பல அறிஞர் பெருமக்கள் உங்களிடம் உரையாற்றி இருக்கிறார்கள்.
இந்த உரைகள் எல்லாம் மாநில உரிமைப்போர் வரலாற்றில் மிக மிக முக்கியமான ஆவணங்களாக மாறி இருக்கின்றன. இந்தக் கருத்தரங்கம் இன்றைகு தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாக நிச்சயம் அமையும்.
இந்தக் கருத்தரங்கை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த அத்தனைப் பேருக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில சுயாட்சியை வென்றெடுப்போம், வாழ்க தமிழ்நாடு. நன்றி, வணக்கம்.
பங்கேற்றவர்கள்
அமைச்சர் தங்கம் தென்னரசு, குழுவின் தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான குரியன் ஜோசப், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்கள் அசோக்வர்தன் ஷெட்டி ஐ.ஏ.எஸ்., பேராசிரியர் நாகநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் எழிலன், பரந்தாமன், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்., பொதுத்துறை அரசுச் செயலாளர் ரீட்டா ஹெரிஸ் தாக்கர் ஐ.ஏ.எஸ்., தமிழ்தாசன், சூர்யா கிருஷ்ணமூர்த்தி, மதுரை பாலா, சஃபி, வழக்கறிஞர் சரவணன், எழுத்தாளர் கௌதம்ராஜ் உள்பட அறிஞர்கள் கல்வியாளர்கள் எனப்
பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment