மக்களவையில் – கனிமொழி கருணாநிதி வலியுறுத்தல்
மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஏப்ரல் 2 ஆம் தேதி நள்ளிரவு கடந்து ஏப்ரல் 3 ஆம் தேதி முன்னிரவு 2 மணிக்கு நடைபெற்றது.
இதில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஆற்றிய உரை வருமாறு:–
”மணிப்பூர் விவகாரம் பற்றி இந்த அவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான நாங்கள் பல முறை இங்கே வற்புறுத்தியிருக்கிறோம்.
ஆனால், இப்போது, நள்ளிரவு 2 மணிக்கு நீங்கள் நேரம் தேர்வு செய்திருக்கிறீர்கள். இதுதான் மணிப்பூர் மக்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறையா? இதுதான் மணிப்பூர் மக்கள் பற்றி விவாதிப்பதற்கான நேரமா? இதுவே இந்த அரசு மணிப்பூர் மக்கள் மீது வைத்திருக்கும் மரியாதையைக் காட்டுகிறது. முறையாக நாளை இதை விவாதிப்ப தற்கான வாய்ப்பை ஏன் நீங்கள் வழங்கவில்லை? இது பெருஞ்சோகம்.
மணிப்பூரில் நடந்த வன்முறைகளால் 260 க்கும் மேல் மக்கள் உயிரிழந்துவிட்டனர். 67 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். 5 ஆயிரம் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தேவாலயங்கள், கோவில்கள் சூறையாடப்பட்டிருகின்றன,.
நாங்கள் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு சென்றோம்., அங்கே மக்களை சதித்தோம். அங்கே ஒரு தாயை பார்த்தேன். ஒவ்வொரு நாளும் அந்த முகாமின் வாசல் கதவருகே நின்று அவள் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவரது மகன் திரும்ப வருகிறானா இல்லையா என்பதுதான் அந்தத் தாயின் எதிர்பார்ப்பு. அந்த தாயின் ஒரே ஒரு கோரிக்கை என்ன தெரியுமா? ‘என் மகன் இருக்கிறானா இல்லையா என்பதை மட்டும் சொல்லிவிடுங்கள். ஒவ்வொரு நாளும் அவன் வருவான் வருவான் என்று நம்பிக் கொண்டிருக்கி றேன். அவன் இல்லையென்று சொல்லிவிட்டால் என் எதிர்பார்ப்பையாவது நிறுத்திக் கொள்வேன்’ என்று கதறினார்.
இது ஏதோ ஒரே ஒரு பெண்ணின், ஒரே ஒரு தாயின் கதை அல்ல. மணிப்பூரின் பல்லாயிரக்கணக்கான தாய்கள் வலியும் வேதனையும் மிகுந்த காத்திருப்பில் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தில் இருந்தவர்கள் இடம்பெயர்ந்து எங்கேனும் சென்றிருக்கிறார்களா... அல்லது இந்த உலகத்தை விட்டே சென்றுவிட்டார்களா என்ற கேள்விக்கு விடை தெரியாமல் ஒவ்வொரு நிமிடமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட துயரில் தவிக்கும் மணிப்பூருக்கு அங்கே இருந்த அரசு அமைதியை நிலைநாட்ட எதுவும் செய்யவில்லை என்பது கொடுந்துயர்.
அங்கே தேர்ந்தெடுக்கபப்ட்ட முதலமைச்சரே வன்முறையை உருவாக்குவதிலும், தூண்டிவிடுவதிலும் ஈடுபட்டிருக்கிறார். ஆயுதங்கள் எப்படி தீவிரவாதிகள், போராட்டக் காரர்கள் கைகளுக்கு சென்றன? இது வெட்கக் கேடானது. உயிரிழப்புகளுக்கு யார் பதில் சொல்வது? இரு பெண்கள் ஆடையின்றி பொதுவெளியில் இழுத்துச் செல்லப்பட்டனர். இது தேசத்துக்கே அவமானம். யார் அதற்கு பதில் சொல்வது?
இப்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு அங்கே மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் சொல்கிறார். ஆனால் அதன் பிறகும் அங்கே ரத்தக் களறி தான் ஏற்பட்டது. சுதந்திரமாக நாடமாடுகிறார்கள் என்று அமித் ஷா சொன்ன பிறகு 103 பேர் காயமடைந்திருக்கிறார்கள். 16 பேர் மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் ஆட்சியால் அங்கே என்ன நடந்துவிடப் போகிறது?
14 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகளுக்கு மீண்டும் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் கல்விக்காக 2.3% தான் பட்ஜெட்டில் மணிப்பூருக்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 28% உணவு பட்ஜெட்டிலும் குறைக்கப்பட்டு ள்ளது. அங்கே முகாம்களில் தண்ணீர் இல்லை, உணவு இல்லை.
எங்கள் தமிழ்நாடு முதல்வர் தெளிவாக சொல்லியிருக்கிறார். மணிப்பூரில் இயல்பு நிலை உருவாக வேண்டுமென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைய வேண்டும் என்று கூறியுள்ளார். அங்கே அமைதி, இணக்கம் கொண்டுவர வேண்டும். இந்த அரசு போல இல்லாமல் புதிய அரசு மக்களிடம் இணக்கம் ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
மணிப்பூரில் இருக்கும் பெண்கள் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கும் நாட்டுக்கும் நேர்மையாக இருக்க வேண்டிய நேரம் இது.
இவ்வாறு கனிமொழி கருணாநிதி உரையாற்றினார்.
Comments
Post a Comment