நான் முதலமைச்சராக இருக்கும் வரை தமிழ்நாட்டில் டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்கவே மாட்டேன்!
நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடமாட்டேன்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் பிரகடனம் செய்தார்.
சட்டப்பேரவையில் நேற்று மதுரை மாவட்டம் அரிட்டப்பாட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தனித் தீர்மானம் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் உரையாற்றினர்.
அந்த வகையில் தனித் தீர்மானம் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, ‘‘தமிழக அரசு
10 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தது’’ என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அதே
கேள்வியை எழுப்பிய வண்ண மிருந்தார்.
அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,. தொடக்கம் முதலே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்த்து வருகிறோம். சுரங்கத்துக்கு ஒப்பந்தம் விடுவதற்கான சட்டத்தில் ஒன்றிய அரசு தானே ஒரு திருத்தத்தை செய்துவிட்டது. யாரையும் கேட்கவில்லை. சட்டத்தைத் திருத்திவிட்டு ஒன்றிய அரசு என்ன சொல்கிறது என்றால், சுரங்கத்துக்கான ஏலம் விடும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கே உள்ளது.
மேலும், ஒன்றிய அரசு தேர்வு செய்யும் ஏலதாரருக்கு சுரங்கத்தை குத்தகை விடும் அதிகாரம் மட்டுமே மாநிலத்துக்கு உள்ளது என்று கூறியிருக்கிறது. டங்ஸ்டன் சுரங்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை புள்ளி விவரங்களுடன் ஒன்றிய அரசுக்கு தெரிவித்துவிட்டோம். தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது முற்றிலும் தவறானது என்று கூறினார்.
அப்போதும் எடப்பாடி பழனி சாமி தான் கூறியதையே மீண்டும் கூறினார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு அளித்த பதிலடி வருமாறு:-
இங்கு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் நாடாளுமன்றத்தில் உங்கள் உறுப்பினர்கள் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பெருமை பேசுகிறீர்களே, என்ன செய்தீர்கள் என்ற ஒரு கேள்வியைக் கேட்டார்கள். எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலே கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) நான்கூட, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார் என்று பொறுமையாக இருந்தேன். ஆனால், இப்போது நான் விவரத்தைக் கேட்டு ஆதாரத்தோடு சொல்கிறேன். நாடாளுமன்றத்திலே எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக இதை எதிர்த்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல; அங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில், அந்த மாவட்டத்தில் அமைச்சராக இருக்கக்கூடிய மூர்த்தி அவர்கள் நேரடியாகச் சென்று, அந்தப் போராட்டத்தின் தன்மையைப் பற்றி அறிந்துகொண்டு, “போராட்டத்தை நிறுத்துங்கள்; எங்கள் அரசு உங்களுக்கு ஆதரவாக இருக்கும்” என்று சொன்னார். அதோடு, இது தொடர்பாக முதலமைச்சர் அவர்களும் இந்தியப் பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் என்று சொல்லி, சட்டமன்றத்தில் இது குறித்து தீர்மானம் கொண்டு வரப்போகிறோம் (மேசையைத் தட்டும் ஒலி) என்பதையும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடத்தில் சொல்லி, அதற்குப் பிறகுதான் இந்தத் தீர்மானம் இங்கு வந்திருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வளவு வேகமாகப் பேசிவிடுகின்ற காரணத்தால் ஏதோ சாதித்துவிட்டோம் என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம். நிச்சயமாகச் சொல்கிறேன்; உறுதியாகச் சொல்கிறேன். நாங்கள் அவ்வப்போது தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறோம்; எங்களுடைய கண்டனக் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல; போராட்டக்களத்தில் ஈடுபட்டிருப்பவர்களிடத்தில்கூட நம்முடைய அமைச்சர் அவர்கள் பேசுகின்றபோது, சட்டமன்றம் கூடுகின்ற போது இதுபோன்ற ஒரு தீர்மானத்தை அவையில் கொண்டு வருவோம் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதோடு, ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதுகின்றபோது, அதுதொடர்பா ன செய்தி வெளியீடுகளில் இந்தியப் பிரதமர் அவர்களுக்கு, முதலமைச்சர் அவர்கள் இதுசம்பந்தமாக கடிதம் எழுதியிருக்கிறார் என்கிற செய்தியெல்லாம் விவரமாக வந்திருக்கிறது. ஆனால், நீங்கள் இதுகுறித்து தெரியவில்லை, தெரியவில்லை என்று பேசினால், என்ன அர்த்தம்?
நாடாளுமன்றம் கூடி, கூடி கலைந்துகொண்டிருக்கிறதே தவிர, அங்கே தொடர்ந்து அவை நடவடிக்கைகள் நடந்ததாக நமக்கு இதுவரையில் செய்தி வரவில்லை. ஆனால், கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி, அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறோம். நாடாளுமன்றம் கூடுகிறது; ஆனால், அவையை ஒத்திவைக்கிற சூழ்நிலைதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறதே தவிர, தொடர்ந்து அவை நடக்கவில்லை. இதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பத்திரிகையில் படித்திருப்பார் என்று நினைக்கிறேன்.
அப்போது எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறோம்; எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று தவறான தகவலை நீங்கள் இங்கே பதிவு செய்கிறீர்கள். அதையும் நான் தெளிவுபடுத்திவிட்டேன். எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறோம்; தி.மு.க. சார்பில் அங்கே எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறோம்.
சட்டம் நிறைவேறியது என்றால், அது எங்களுடைய ஆதரவில் நிறைவேறவில்லை. நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறோம். அது நாடாளுமன்றத்தில் பதிவாகியிருக்கிறது. எப்படி நாங்கள் அதைத் தடுக்க முடியும்? Majority அவர்கள் இருக்கும்போது, அதை எப்படிச் செய்யமுடியும் என்று சொல்லுங்கள். நீங்களும் சில பிரச்சினைகளில் அங்கே குரல் கொடுத்தோம்; குரல் கொடுத்தோம் என்று பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். அப்போதெல்லாம் நிறைவேற்றிய தீர்மானத்தை உங்களால் தடுத்துவிட முடிந்ததா? சொல்லுங்கள்.
ஒன்றிய அரசு இந்த விஷயத்தில் ஏலம் விட்டுவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசைப் பொறுத்தவரையில், நிச்சயமாகச் சொல்கிறேன். ஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், நிச்சயமாக, உறுதியாக இந்த அரசு அதற்குரிய அனுமதியை தருவதற்கான வாய்ப்பே கிடையாது. அதிலே திட்டவட்டமாக இருக்கிறோம். இதுதான் முடிவு.
மறுபடியும் ஆரம்ப காலக்கட்டத்திலிருந்து என்று, ஆரம்பத்திற்குப் போய்விட்டார். திரும்பத் திரும்ப ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறேன். நான் முதலமைச்சராக இருக்கிற வரையில் நிச்சயமாக ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டுவர முடியாது. (மேசையைத் தட்டும் ஒலி) வந்தால் அதைத் தடுத்தே தீருவோம். திரும்ப, திரும்பச் சொல்கிறேன். நான் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருக்கின்ற வரையிலே, நிச்சயமாக நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; அனுமதிக்க மாட்டோம்; அனுமதிக்க மாட்டோம்.
எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், ஏன் இவ்வளவு காலதாமதம்?” என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார். அவர்கள் பார்வையில் அப்படியிருக்கலாம்; அல்லது நாம் தவறிவிட்டோம் என்றுகூட இருக்கலாம். ஆனால், எங்களுடைய பார்வையில் அவ்வப்போது நாங்கள் இந்தப் பிரச்சினையை ஒன்றிய அரசுக்குச் சுட்டிக்காட்டி யிருக்கிறோம்; கடிதம் எழுதியிருக்கிறோம்.
அதனால்தான் திரும்ப, திரும்பச் சொல்கிறேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டிற்குள் ஒன்றிய அரசால் போடப்படக்கூடிய இந்தத் திட்டம், நிச்சயம் வரக்கூடிய வாய்ப்பு இருக்காது, அதைத் தடுத்து நிறுத்துவோம். அப்படி ஒரு சூழல் வந்தால் இந்தப் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்; முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) எனவே, தயவுகூர்ந்து மீண்டும், மீண்டும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவரையும், எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஏற்கெனவே எல்லாக் கட்சித் தலைவர்களும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசியிருக்கிறார்கள். எனவே, நீங்களும் அதை ஆதரித்து ஏகமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக உங்களை நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன்; திட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று சட்டப்பேரவையிலேயே முதல்வர் பிரகடனப்படுத்தி யிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார், இனியும் தொடர்ந்து பேசுகிறீர்கள் என்றால், நீங்கள் வேதாந்தா நிறுவனத்துடனேயே பேசி விடலாம் என்று கூறினார். அதனை தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தனித் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முயற்சிக்கு எதிரான தனித்தீர்மானம் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
Comments
Post a Comment