பேரவையில் ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம்! ஒருமனதாக நிறைவேறியது!
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனே ரத்து செய்ய வேண்டும்’’ என்று சட்டப்பேரவையில் ஒன்றிய அரசை வலியுறுத்தி அவை முன்னவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் அரசின் சார்பில் தனித் தீர்மானம் கொண்டு வந்து முன்மொழிந்தார். பின்னர் இத்தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் வருமாறு :–
“மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இத்தகைய இன்றியமையாத
மற்றும் முக்கியக் கனிமங்களுக்கான உரிமங்களை மாநில அரசுகளின் அனு மதியின்றி, ஒன்றிய அரசு ஏலம் விடக் கூடாது என்று கடந்த 3.10.2023 அன்று, தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருந்தும், இந்த எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாது, ஒன்றிய அரசு இத்தகைய ஏல நடவடிக்கையை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!
இந்த டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது, குடைவரைக் கோயில்கள், சமணச் சின்னங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துக்கள், பஞ்சபாண்டவர் படுகைகள் போன்ற பல வரலாற்றுச் சின்னங்களை உள்ளடக்கியதாகவும், அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் இருப்பதைக் கருத்தில் கொண்டு, இப்பகுதி ஒரு பல்லுயிர்ப் பெருக்கத் தலமாக, கடந்த 2022–ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நிலையிலும், அப்பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமம் ஒன்றிய அரசால் அளிக்கப்பட்டுள்ளதை, தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும், ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
எதிர்த்து 1360 போராட்டங்கள்!
இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வை ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதால், அப்பகுதி மக்கள் இதனை எதிர்த்து 1360 போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இப்பகுதியையும், இப்பகுதியில் வாழும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஒப்பந்தம் வழங்கிய ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கைவிடுமாறு முதலமைச்சர் அவர்கள் இந்தியப் பிரதமர் அவர்களை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார்கள்.
இந்தச் சூழ்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக இரத்து செய்திடவும், மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்தச் சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்றும், ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்தப் பேரவை ஒருமனதாக தீர்மானிக்கிறது.”
இவ்வாறு தீர்மானத்தை முன் மொழிந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பேசினார்.
அனைத்துக் கட்சியினரும் வரவேற்பு!
இத்தீர்மானத்தின் மீது சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சியினரும் வரவேற்று பேசினர்.அ.தி.மு.க.– எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அரசு கொண்டுவந்த தனித் தீர்மானத்தை வரவேற்பதாக கூறிட பேரவையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.– இத்தீர்மானத்தின் மீது சட்டமன்ற கட்சித் தலைவர்கள்,- உறுப்பினர்கள் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கொங்கு நாடு ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி அப்துல்சமது, ம.தி.மு.க. சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சின்னதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிந்தனைச் செல்வன், பா.ஜ.க. நைனார் நாகேந்திரன், பா.ம.க. ஜி.கே.மணி, காங்கிரஸ் அசோகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பேசினர்.
இதையடுத்து இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் அறிவித்தார்.
Comments
Post a Comment